அபாயம்காட்டு ஓடைகளில் மணல் கொள்ளை மானாவாரி பயிர் சாகுபடி பாதிக்கும்

செப்டம்பர் 13,2012,01:51 IST

கம்பம்:கம்பம் மலையடிவாரங்களில் உள்ள காட்டு ஓடைகளில், மணல் கொள்ளை அதிகளவில் நடப்பதால் மானாவாரி காடுகளில்,விவசாயம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மணல் கொள்ளை கும்பலின் நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. தேனி மாவட்டத்தில் பல பகுதிகளில் மணல் கொள்ளை நடந்த போதும், கம்பத்தில் மணல் கொள்ளை அனுமதிக்கப்பட்டதை போல நடந்து வருகிறது. முல்லையாற்றில் இரவு பகலாக 24 மணி நேரமும் மணல் அள்ளப்படுகிறது. செங்கல் சூளைகளுக்கு மண் அள்ள அனுமதிக்கப்பட்ட காடுகளில், கனிமவளத்துறையின் நிபந்தனைகள் பின்பற்றப்படவில்லை.இதனால் சுற்றுச் சூழல் மாசுபடும் நிலை உள்ளது. மலையடிவாரங்களில் உள்ள காட்டு ஓடைகளில் மணல் கொள்ளையை வருவாய்த்துறை அனுமதிக்கிறது. ஜேசிபி இயந்திரங்களை கொண்டு, தினசரி நூற்றுக்கணக்கான லோடு மண் கடத்தப்படுகிறது. மணிகட்டி ஆலமரம், ஆட்டுக்காரன்மொட்டை பகுதியில் உள்ள காட்டு ஓடையில் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மண் அள்ளப்படுகிறது. 200 அடிக்கும் கீழ் ஆழமாக தோண்டப்பட்டு விட்டது. இதனால் மானாவாரி காடுகளில் சாகுபடி பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விடும். நடவடிக்கை எடுக்க வேண்டிய வருவாய்த்துறை அதிகாரிகள், மணல் கொள்ளைக்கு அனுமதி வழங்கி வேடிக்கை பார்த்து வருகின்றனர். பெயருக்கு ஒன்றிரண்டு டிராக்டர்களை பிடிப்பதும், அதற்கு அபராதம் விதிப்பதும் வாடிக்கையாக உள்ளது.

Courtesy: Dinamalar.com – http://www.dinamalar.com/district_detail.asp?id=546350

Advertisements