ஹைவேவிஸ் ரோடு – விபத்துக்களில், 38 பேர் உயிரிழந்துள்ளனர்

செப்டம்பர் 13,2012,01:51 IST

சின்னமனூர்:சின்னமனூரிலிருந்து ஹைவேவிஸ் மலை வரையிலான 58 கி.மீ., ரோடு 1996 க்கு பின் பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைந்தது. கடந்த 16 ஆண்டுகளாக இதே நிலையில் நீடித்து, தற்போது மிகவும் பரிதாபகரமாக, துண்டிப்பாகும் நிலையில் உள்ளது. ரோட்டின் மோசமான நிலையால் ஏற்பட்ட விபத்துக்களில், 38 பேர் உயிரிழந்துள்ளனர். தனியார் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ரோட்டின் நிலையை, எந்த அரசும் கண்டுகொள்வதில்லை. இம்மக்களின் தொடர் முயற்சியால், மூன்று ஆண்டுகளுக்கு முன் அப்போதைய மாவட்ட நிர்வாகம், ரோடு அமைக்கும் விவகாரத்தில் தடையாக இருந்த எஸ்டேட் நிர்வாகத்திற்கு கடிவாளம் போட்டு, ரோட்டை அரசு வசம் ஒப்படைக்க வைத்தது. பின்னர் பல்வேறு இழுபறிகள் ஏற்பட்டு, இறுதியாக மாநில நெடுஞ்சாலை வசம் ஒப்படைக்கப்பட்டது. ரோடு அமைப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. ஆண்டுதோறும் இங்கு கோடை விழா நடத்தி, அப்போது மட்டும் “ரோடு புதிதாக அமைத்து சுற்றுலாத் தலமாக்கப்படும்’ என அறிவிப்பை மட்டும் அதிகாரிகள் வெளியிட்டு செல்வது வழக்கமாகி விட்டது. பல ஆண்டுகால இம்மக்களின் கோரிக்கை கிணற்றில் போட்ட கல்லாக கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், 25 வது முறையாக செப்டம்பர் 15ல், இம்மலையின் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். 24 முதல் தொடர் உண்ணாவிரதமும், அக்டோபர் 2 ல் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கும் போராட்டமும் நடைபெறும், என அப்பகுதி தேயிலை தோட்ட தொழிலாளர்களும், பொதுமக்களும் அறிவித்துள்ளனர்.

Courtesy: Dinamalar.com – http://www.dinamalar.com/district_detail.asp?id=546353

Advertisements