நெற்பயிர்களை காக்க கம்பத்தில் இடிக்கி மூலம் பிடிக்கப்படும் எலிகள்

பதிவு செய்த நேரம்:2012-09-13 12:03:56

கம்பம், : கம்பம் பகுதியில் எலிகளிடமிருந்து நெற்பயிரை பாதுகாக்க விவசாயிகள் இடிக்கி வைத்து பிடிக்கும் முறையை கையாண்டு வருகின்றனர்.
கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியான கம்பம், கூடலூர், சுருளிப்பட்டி, காமயக்கவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது முதல் போக நெல் நடவுப்பணி தொடங்கி களையெடுப்பு தொடங்கியுள்ளது. இந்நிலையில் இளம் நெற் பயிர்களை எலிகள் நாசம் செய்து வருவதால் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு அதிகம் நஷ்டம் ஏற்படுகிறது. இதைத்தடுக்க விவசாயிகள் வயல் வெளிகளில் உள்ள எலிகளை இடிக்கி வைத்துப் பிடித்து வருகின்றனர். மூங்கிலால் செய்யப்பட்ட இடிக்கிகளை பயிர்களுக்கு நடுவே ஊன்றி வைக்கின்றனர். அதைச் சுற்றியும் அரிசி, நெல், நிலக்கடலை பருப்பு, தேங்காய் ஆகியவற்றை கலந்து முதல் நாள் இரவு வைத்து விடுகின்றனர். மறுநாள் பார்க்கும்போது வயல் வெளிக ளில் உள்ள எலிகள் அனைத் தும் இடிக்கியில் சிக்கிக் கொள்கிறது. இவ்வாறு எலிகளைப் பிடித்து அழிப்பதால் பயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன.
இது குறித்து எலி பிடிக்கும் தொழிலாளி பழனிச்சாமி கூறுகையில், “வயலில் ஆங்காங்கே இடிக்கி வைத்து எலி பிடித்தால் ஒரு எலிக்கு 15 ரூபாய் வீதம் விவசாயிகள் கூலியாகக் கொடுக்கின்றனர். இதன் மூலம் தினமும் ஒரு ஏக்கருக்கு 150 ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது. நெற்பயிர்கள் மட்டுமன்றி கரும்பு, கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களுக்கும் இந்த இடிக்கியைப் பயன்படுத்தி எலிகள் தொல்லையிலிருந்து பாதுகாத்து வருகிறோம்“ என்றார்.

Courtesy: Dinakaran.com – http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=93680&cat=504

Advertisements