கேரளாவில் புடலைக்கு அதிக விலை கம்பம் விவசாயிகள் மகிழ்ச்சி

பதிவு செய்த நேரம்:2012-09-13 12:04:24

கம்பம், : கம்பம் பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு புடலை அதிகளவில் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுவதால் நல்ல விலை கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் அதிகளவில் உயர் ரக புடலை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 15 ஆண்டுக்கு மேலாக கருப்பு பன்னீர் திராட்சை பயிரிட்டு விவசாயம் செய்து வந்தனர். திராட்சை விவசாயம் ஓய்ந்ததால், திராட்சைக்காக அமைக்கப்பட்ட பந்தலில் பாவை, கோவை, புடலை உள்ளிட்ட காய்கறிகள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புடலங்காய் நடவு செய்யப்பட்டு 25 நாட்களில் கொடிகள் படர்ந்து பலன் கொடுக்க ஆரம்பிக்கிறது. அதன்பிறகு வாரம் தோறும் ஏக்கருக்கு சுமார் 2 டன் வரை காய் பறிக்கப்படுகிறது. இதனை விற்பனைக்காக அதிகளவு கேரளாவிற்கும், உள்ளூர் சந்தைகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. புடலங்காய் 90 நாட்கள் வரை பலன் கொடுக்கிறது. போதிய விலை கிடைப்பதால் இப்பகுதி விவசாயிகள் புடலை பயிரிட அதிகளவு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘உயர்ரக புடலை செடிகளில் உள்ள காய்கள் விவசாயிகள் தங்கள் வசதிக்கேற்ப பறித்து கொள்ளலாம்.
சில சமயங்களில் போதிய விலை இல்லாத நேரங்களில் சில நாட்கள் பறிக்காமல் விட்டு விட்டு, விலை அதிகரிக்கும்போது பறித்து விற்பனைக்கு கொண்டு செல்லலாம். இதனால் காய்களுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. தற்போது கிலோ 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகளுக்கு போதிய வருவாய் கிடைக்கிறது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் திராட்சை விவசாயம் ஓய்ந்த நிலையில் புடலை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறோம்’ என்றார்.

Courtesy: Dinakaran.com – http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=93685&cat=504

Advertisements