கூட்டுறவு சங்கங்களில் உரம் வாங்கும்சிறு விவசாயிகள் அலைக்கழிப்பு

செப்டம்பர் 13,2012,01:51 IST

கம்பம்:தொடக்க கூட்டுறவு விவசாய வங்கிகளில், விவசாயிகள் உரம் வாங்க செல்லும் போது, அதிகாரிகள் கேட்கும் ஆவணங்களை சேகரித்து தர முடியாமல்,விவசாயிகள் அவதிப்படுகின்றனர். முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் இப்போது 119 அடியாக உயர்ந்துள்ளதால், விவசாயிகள் அனைவரும் முதல் போக சாகுபடிக்கான பணிகளை துவக்கியுள்ளனர். பல விவசாயிகள் ஒரு மாதத்திற்கு முன்பே நடவு பணிகளை முடித்துவிட்டனர்.இதனால் விவசாயிகளுக்கு யூரியா மற்றும் பொட்டாஷ் உரங்கள் தேவைப்படுகிறது. கடைகளில் உரங்கள் கிடைக்கவில்லை. வழக்கம் போல தொடக்க விவசாய கூட்டுறவு வங்கிகளில் யூரியா மற்றும் பொட்டாஷ் உரங்கள் விற்பனைக்கு வைத்துள்ளனர். உரங்கள் கேட்கப்போகும் “பெரிய’ விவசாயிகளுக்கு பிரச்னை இல்லை. அவர்கள் ஆவணங்கள் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் உரங்கள் வழங்கப்படும். சிறிய விவசாயிகள் சென்று, கேட்டால், சிட்டா அடங்கங்கல், பட்டா, பத்திரம் ஜெராக்ஸ் என பல ஆவணங்களை கேட்கின்றனர். ஒத்தி வாங்கியிருந்தாலும், அந்த பத்திரங்களின் ஜெராக்ஸ் தரும்படி வலியுறுத்துகின்றனர். பொதுவாக கிராமங்களில் வாய்மொழியாக பேசி, வயல்களை உழவு செய்வார்கள். அவ்வாறு செய்யும் விவசாயிகளுக்கு ஆவணங்கள் வழங்க முடியாது. சொசைட்டிகளில் ஆவணங்கள் இல்லாமல் உரம் வழங்க மறுக்கின்றனர்.இதனால் பெரும்பாலான விவசாயிகள், கூட்டுறவு சங்கங்களில் உரம் வாங்குவதை தவிர்க்கின்றனர். கூட்டுறவு சங்க அதிகாரிகளோ இதை பயன்படுத்தி உரங்களை வேண்டியவர்களுக்கு தாரளமாக “வழங்கி’ வருகின்றனர்.

Courtesy: Dinamalar.com – http://www.dinamalar.com/district_detail.asp?id=546356

Advertisements